மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவையொட்டி மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரை 12 பெண் காவலர்கள் பைலட்டுகள் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து அவள் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பெண் போலீசாரின் சென்னை கன்னியாகுமரி சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வரலாற்றில் முதல் முதலாக பெண்கள் காவலர் ஆகலாம் என்ற நிலையை உருவாக்கி காக்கி பேண்ட், சட்டை அணிய வைத்து பெண்கள் கையில் துப்பாக்கியை கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
கடந்த 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் காவல் உதவி ஆய்வாளர், பெண் காவலர்களை காவல் பணியில் சேர்க்க வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறப்பித்தார். மேலும் அவர் விதைத்த விதையின் விளைவாகவே இன்று தமிழக காவல்துறையில் 35 ஆயிரத்து 329 பெண் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கருணாநிதி தொடங்கி வைத்த ஒரு சகாப்தத்தின் பொன்விழாவில் அவரது மகனாக முதல்வராக நான் கலந்து கொள்வது எனக்கு பெருமை என பேசினார். பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட் காவல் பணியோடு சேர்த்து குடும்ப பணிகளையும் செய்தாக வேண்டிய நெருக்கடி பெண் காவலர்களுக்கு உள்ளது. பெண் காவலர்கள் வீட்டையும் நாட்டையும் சேர்த்து பாதுகாக்கின்றார்கள். அதனால் ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால் பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட் என்று கூறினார்.
மேலும் பெண்கள் என்று தமிழக காவல்துறையின் அனைத்து பிரிவுகளிலும் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். மாநிலத்தின் மொத்தமுள்ள 1356 சட்ட மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் 53 காவல் நிலையங்களில் பெண்கள் தான் ஆய்வாளர்களாக இருக்கின்றனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பில் பெண் ஆய்வாளர்களின் பங்கு 37 சதவீதம் ஆகும். நடப்பாண்டில் பணியில் சேர்ந்த 21 டிஎஸ்பி களில் 17 டிஎஸ்பிகள் பெண்கள் தான்.
மேலும் பொன்விழா கொண்டாடிய நாளில் பெண் காவலர்களுக்கு நவரத்தினம் போன்று ஒன்பது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் அடிப்படையில் பெண் காவலர்கள் குடும்ப தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியை செய்து வருவதால் அவர்கள் நீண்ட நாள் கோரிக்கையான ரோல் கால் எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு இனி காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு நடைபெறும்.
மேலும் சென்னை, மதுரை போன்ற இடங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனியாக கழிப்பறை உடன் கூடிய ஓய்வு அறை கட்டி தரப்படும். பெண் காவலர்களின் குழந்தைகளை பராமரிக்க சில மாவட்டங்களில் அமைக்கப்பட்ட காவல் குழந்தைகள் காப்பகம் முழு அளவில் மேம்படுத்தி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.