ஜடேஜா&ஸ்ரேயாஸ் போராட்டம் வீண்:தொடரை இழந்த இந்திய அணி!
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் தொடரை வென்றுள்ளது நியுசிலாந்து.
நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி.
நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் மற்றும் நிக்கோல்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். நிக்கோல்ஸ் 41 ரன்களில் அவுட் ஆக அதன் பின் வந்த பிளண்டல் 21 ரன்களை சேர்த்து அவ்ட் ஆனார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய குப்தில் 79 ரன்களில் அவுட் ஆனது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
இந்திய பவுலர்களால் கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. ஒருகட்டம் வரை நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அதன் பின்னர் அதிரடியில் இறங்கி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. இதனால் அந்த அணியால் கௌரவமான ஸ்கோரான 273 ரன்களை சேர்க்க முடிந்தது. கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த டெய்லர் 73 ரன்களும் ஜேமிஸன் 25 ரன்களும் சேர்த்தனர். இந்தியா சார்பில் சஹால் 3 விக்கெட்களும், தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பமே அதிர்ச்சியாகத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் 3 ரன்களி அவுட் ஆக அடுத்து வந்த கோலியோடு சிறிது நேரம் தாக்குப்பிடித்தார் பிருத்வி ஷா. 24 ரன்கள் சேர்த்த அவர் ஜேமிஸன் பந்தில் போல்டானார். அதையடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிலை பெறுவதற்குள் கோலி 15 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின் வந்த ராகுல் வந்தவேகம் தெரியாமல் 4 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்தியா 71 ரன்களுக்கே 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் வந்த கேதர் ஜாதவ் 9 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்த ஜடேஜா நம்பிக்கை அளித்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக விளையாட ஸ்கோர் கொஞ்ச கொஞ்சமாக ஏறியது. அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் 52 ரன்களில் அவுட் ஆனார்.தாகூர் 18 ரன்கள் சேர்த்து வெளியேற ஜடேஜாவோடு சைனி ஜோடி சேர்ந்து விக்கெட்டைக் கொடுக்காமல் விளையாடினார். இந்த ஜோடி 8 ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. சைனி 45 ரன்களில் அவுட் ஆக வெற்றி வாய்ப்பு சுத்தமாகத் தகர்ந்தது. அதன் பின்னர் வந்த சஹால் 10 ரன்களில் அவுட் அனார். 48 ஆவது ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற ஜடேஜா கேட்ச் கொடுத்து அவுட் ஆக இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரைசதம் அடித்த ஜடேஜா 55 ரன்களை சேர்த்தார். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.