சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!!

0
149
#image_title

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!!

எஸ்சி-எஸ்டி வன்கொடுமை வழக்கில் ஜாமீன் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமையாகும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை மாவட்டம் சாம்பிராணிபட்டியில் உள்ள நிலம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியின் போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. மேலவளவு போலீசார் கோபாலகிருஷ்ணன் தரப்பினர் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில், கோபாலகிருஷ்ணன் தரப்பினர் மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.

இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி எதிர் தரப்பை சேர்ந்த அனிதா,லட்சுமணன் மற்றும் சுரேஷ் ஆகியோர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.டி ஜெகதீஸ்சந்திரா பிறப்பித்த உத்தரவு:

மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்கும் போது பாதிக்கப் பட்டோரின் ஆட்சேபத்தையும் பரிசீலித்திருந்தால் தற்போது ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கலாகும் நிலை ஏற்பட்டிருக்காது. தற்போதைய சூழலில் ஜாமீன் உத்தரவு நிலைக்க தக்கதா, குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு, குற்றம் சாட்டப் பட்டோரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள். ஜாமீனுக்கு பிந்தைய சூழல் உள்ளிட்டவற்றை பார்க்க வேண்டியுள்ளது.

விசாரணை நீதிமன்றம் ஆட்சேபத்தையும் பதிவு செய்து இயந்திரத்தனமாக ஜாமீன் வழங்கியுள்ளது ஆனால், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான துன்புறுத்தல், அவமரியாதை மற்றும் அவமானத் தை தடுத்திடும் வகையில் தான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.உயர்சாதியினரால் பட்டியல் இனத்தினர் எதிர் கொள்ளும் கொடுமைகளை போக்கிடவும், நீதி வழங்குவதுமேயாகும். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையை வழங்குதல், பயம், வன்முறை மற்றும் அடக்குமுறையற்ற கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதுதான் சட்டத்தின் நோக்கமாகும். எஸ்சி-எஸ்டி வன்கொடுமை வழக்கில் ஜாமீன் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமையாகும். இந்த வழக்கின் ஒரு மனுதாரரும் ஜாமீன் பெற்றவர்கள் தரப்பால் கொலை செய்யப் பட்டுள்ளார். முதலில் பிரச்னை நடந்த 2 ஆண்டுக்கு பிறகு பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தளவுக்கு வெறுப்பும், விரோதமும் இருந்துள்ளது எனவே, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை வழக்கில் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கு மதுரை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.

இந்த வழக்கு மீண்டும் அதே நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பாதிக்கப்பட்டோர் தரப்பு ஆட்சேபத்தையும் கருத்தில் கொண்டு சட்டத்திற்குட்பட்டு முடிவெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர்2 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.