வருகைப்பதிவு இல்லையா அபராதம் ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் ஒரு பருவத்தில் 85 சதவீதம் வருகை புரியாத மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க ரூபாய் 1000 அபராத கட்டணமாக வசூல் செய்து கல்லூரிகள் கட்ட வேண்டும் என, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 பருவங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் பருவம் மே, ஜூன் மாதங்களிலும், 2 ம் பருவத்திற்கான தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் நடத்தப்படுகின்றன.
இந்தத் தேர்வினை தனியார் கல்வியியல் (பிஎட், எம்எட் ) கல்லூரிகளில் நடத்தாமல், அரசு உதவிப்பெறும் அல்லது பிஎட் பட்டப்படிப்பினை நடத்தாத தனியார் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.இந்தப் பருவத்திற்கான தேர்வினை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்(பொறுப்பு) கணேசன் , அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், குறைந்தபட்ச வருகைப்பதிவேடு அளவிற்கு கல்லூரிகளுக்கு வராத மாணவர்களின் விவரங்களை, வரும் 6 ந் தேதிக்குள் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தின் – [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் அனைத்து மாணவர்களும், 85 சதவீதம் வருகைப் புரிய வேண்டும். அவ்வாறு வருகைப் புரியாமல் 75 சதவீதம் முதல் 84 சதவீதம் வரையில் வருகைப் பதிவு உள்ள மாணவர்கள், அதற்கான மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கலாம். மேலும் வருகைப் பதிவு குறைந்ததற்காக ரூபாய் 1000 அபராத கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.