கலாசேத்ரா கல்லூரி: பேராசிரியர்களின் தூண்டுதலால் மாணவி புகார் அளித்ததாக கைதானவரின் மனைவி புகார் 

கலாசேத்ரா கல்லூரி: பேராசிரியர்களின் தூண்டுதலால் மாணவி புகார் அளித்ததாக கைதானவரின் மனைவி புகார் 

கலாசேத்ரா கல்லூரி மாணவி பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம். 

இரண்டு பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில் முன்னாள் மாணவி புகார் அளித்ததால் தனது கணவர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.

கலாசேத்ரா கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் மாணவி கொடுத்த புகாரில் கலாசேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் வழக்கின் திருப்பமாக கைது செய்யப்பட்டுள்ள ஹரி பத்மனின் மனைவி திவ்யா காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தான் கலாசேத்திரா கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு,அதே கல்லூரியில் பேராசிரியராக 2003 ஆம் ஆண்டு வரை பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலாசேத்ரா கல்லூரியின் பேராசிரியர்களான நிர்மலா நாகராஜன் மற்றும் நந்தினி நாகராஜன் ஆகியோரின் தூண்டுதலின் பெயரில் முன்னாள் மாணவி தனது கணவர் ஹரி பத்மன் மீது பாலியல் புகார் கொடுத்திருப்பதாக புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலாச்சேத்ரா கல்லூரி மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன் பிறந்தநாள் விழா கொண்டாடும்போது, தனது கணவர் ஹரி பத்மனை பேராசிரியர் ஜனார்த்தனன் அனைவரது முன்னிலையிலும் வாழ்த்தி நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்குமாறு பாராட்டியது பேராசிரியர்கள் நிர்மலா மற்றும் நந்தினிக்கு பிடிக்கவில்லை எனவும் இதனால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக முன்னாள் மாணவியை தூண்டிவிட்டு தனது கணவர் ஹரி பத்மன் மீது பாலியல் புகார் கொடுக்க வைத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கணவர் மீது புகார் கொடுத்த முன்னாள் மாணவி தனது கணவரின் அத்துமீறல் செயலால் கல்லூரியை விட்டு சென்றதாக பொய்யாக கூறி இருப்பதாகவும், அவர் கனடா நாட்டிற்கு செல்வதற்காக கல்லூரியை பாதியில் நிறுத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் நடந்ததாக முன்னாள் மாணவி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டில் நடந்த தனது மகனின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவி சந்தோஷமாக வருகை தந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி மாணவி கல்லூரியை விட்டு சென்ற பிறகு பேஸ்புக்கில் தனது கணவர் ஹரி பத்மன் பற்றி நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் மாணவி கலாச்சேத்ரா நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தனது கணவர் ஹரி பத்மன் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதை பழிவாங்கும் நோக்கில் நான்கு வருடம் கழித்து புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் பொய் புகார் கொடுத்து தனது கணவரை சிறைக்கு அனுப்பிய இரண்டு பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் மூத்த பெண் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும் திவ்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.