கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி! பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்!
பாரத பிரதமர் மோடி தனது இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வரவுள்ளார். இதனை முன்னிட்டு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களையும் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமரின் வருகை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது பிரதமர் நாளை சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் போது அவரை சந்திக்க விரும்பும் நபர்கள் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்தில் கொடுத்திருப்பதாகவும், அதை அங்குள்ள அதிகாரிகள் பரிசீலனை செய்து அவர்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என கூறிய அண்ணாமலை.
பிரதமரை சந்திக்க விரும்பும் நபர்களை நிச்சயம் அவர் பார்க்கத்தான் போகிறார், மேலும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலமே உள்ளதால் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால் அவரின் வருகை எழுச்சியை தரும், பிரதமரை பொறுத்தவரை தமிழக மக்களின் நலனை எப்போதும் தனது இதயத்தில் வைத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கிடைத்த நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் தற்போது லேசான விரிசல் உள்ளது பற்றியும் ஆலோசிக்கப்படும் என அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.