ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து! உடல் கருகிய கொடூர சம்பவம்..!!
ஹைட்டி நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பதினைந்து குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டி நாட்டின் தலைநகர் அருகே உள்ள பெர்மேட் என்னும் நகரில் “சர்ச் ஆப் பைபிள்” என்ற பெயரில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் சமூக சேவையின் காரணமாக அமைந்துள்ளது. பெற்றோர் இல்லாமல் தனித்துவிடப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் அங்கு தங்கி இருந்தனர்.
இரவு நேரத்தில் ஜெனரேட்டர் மற்றும் இன்வெட்டரில் எதிர்பாராத விதமாக கோளாறு ஏற்பட்டு வெளிச்சம் இல்லாமல் போனது. இதன் காரணமாக இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியர் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தனர். இதனையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக கட்டடத்தில் தீ பற்ற ஆரம்பித்து அறை முழுக்க வேகமாக பரவியது.
தீப்பற்றிய சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகுதான் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. வேகமாக பரவிய தீயில் 15 சிறுமியர் உடல் கருகி பலியாகி இருந்தனர். பலியான குழந்தைகளின் உடல்களை தீயணைப்பு துறையினர் வெளியே எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிறுவர்கள் இறந்திருக்க கூடும் என்ற தகவல் சொல்லப்படுகிறது.
மேலும், தீ விபத்தில் இறந்தவர்கள் 2 லிருந்து 18 வயதிற்கு உள்ளானவர்கள் என்று தகவல் தெரிய வந்துள்ளது. கட்டிடம் முழுவதும் எரிந்து சாம்பமாகி வெளிப்பகுதியில் கரும்புகை படிந்து காணப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இச்சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகமும் சூழ்ந்துள்ளது.