வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் உதவி ஆணையரை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிக்க வரும் ஏப்ரல் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் வசந்தகுமார், 1991 முதல் 2000ம் ஆண்டு வரை தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வந்தார்.
மதுரை உதவி ஆணையராக பணி ஓய்வு பெற்ற இவர், பதவிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 28 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வசந்தகுமாரை விடுதலை செய்து கடந்த 2014 ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தை ஒப்புக் கொண்ட விசாரணை நீதிமன்றம், சொத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் இல்லாததால், சொத்து சேர்த்ததாக கருத முடியாது எனக்கூறி வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும், ஊழல் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் உதவி ஆணையர் வசந்தகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரை விடுதலை செய்து பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக ஏப்ரல் 19 ம் தேதி நேரில் ஆஜராகும்படி வசந்தகுமாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.