பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாற்றியமைப்பு 

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாற்றியமைப்பு

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை கொண்டிருக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது.

வன பாதுகாப்பு தொடர்பாக டி.என். கோதவர்மன் திருமலபாத் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தேசிய உயிரியில் பூங்கா, தேசிய வன விலங்கு சரணாலயஙகள் போன்ற பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் எல்லையிலிருந்து குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை கொண்டிருக்க வேண்டும்.

அங்கு தோண்டும் பணிகளுக்கு அனுமதி கிடையாது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் உள்ள கட்டுமானங்கள் குறித்த பட்டியலை தயாரித்து 3 மாதங்களுக்கு தாக்கல் செய்ய ஒவ்வொரு மாநில தலைமை வனப் பாதுகாவலருக்கும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தளர்த்த கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைத்துள்ளது.