தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் சமையல் காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு 2 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு 1 லிட்டர் அளவு மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசால் தமிழகத்திற்கு 2021 ஏப்ரல் முதல் மாதம்தோறும் 75.36 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. பிறகு 2022 ஆண்டு ஏப்ரல் முதல் 45.20 லிட்டராக குறைக்கப்பட்டது. தற்போது அது மேலும் குறைந்து இந்த மாதம் முதல் 27.12 லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இரண்டு முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், அதை அரசு கருத்தில் கொள்ளவில்லை என்றும், தமிழகத்திற்கு தேவையான அளவு மண்ணெண்ணெய் ஒதுக்குமாறு மத்திய மந்திரியிடம் நேரில் வலியுறுத்துவேன் என அமைச்சர் கூறினார்.