வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜ நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் நாளை மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூறியுள்ளது.
இதை பற்றி சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது.
கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. கண்ணன் ரவுண்டானாவில் இருந்து செல்லும் இரு சக்கர வாகனங்கள் பரசுராமன் தெரு, தர்மராஜா கோவில் தெற்குப்பாதை வழியாக கண்ணன் தெருவிற்கு செல்லலாம்.
இதே போல் கண்ணன் ரவுண்டானாவில் இருந்து செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் திருவொற்றியூர் சாலை, எம்.எஸ்.நாயுடு தெரு, சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் தெருவை அடையலாம். கண்ணன் தெருவில் இருந்து, கண்ணன் ரவுண்டானாவிற்கு செல்லும் வாகனங்கள் இதே வழித்தடத்தில் சென்று வரலாம்.
போஜ ராஜா நகர் செல்லும் கனரக வாகனங்கள், சிபி சாலை, கொருக்குப்பேட்டை ரயில்வே கேட், கண்ணன் தெரு, போஜ ராஜா ரயில்வே கேட் வழியாக செல்லலாம்.
இதன் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலும், 3 வது வழித்தடத்தில் கெல்லீஸ் முதல் தரமணி வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சுரங்கப்பாதை அமைக்கப்படும்.