தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!! 4 கோடி பட்ஜெட்!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உணவு வீதிகளை (Food Street) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடு முழுவதும் உணவு வீதிகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக தமிழகத்தில் 4 இடங்களில், 4 கோடி பட்ஜெட்டில் உணவு வீதிகளை உருவாக்கவுள்ளது.
பொதுமக்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள் இடையே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஏற்படுத்தி, உணவுகளின் மூலமாக வரும் நோய்களை குறைத்து, ஆரோக்கியத்தை சீர் செய்வதே இத்திட்டத்தின் சாராம்சமாகும்.
இந்த திட்டத்தின் சோதனை முயற்சியாக, ஒரு உணவு வீதிக்கு (Food Street) 1 கோடி ரூபாயை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கம் வழங்கவுள்ளது. இந்த நிதியானது சுத்தமான குடிநீர், கை அலம்புதல், கழிவறைகள், பொதுவான இடங்களில் தரைகள் அமைத்தல், திரவ மற்றும் திட கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப் பட வேண்டும்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுபாட்டு ஆணையத்தின் தொழில்நுட்ப உதவியுடன், தேசிய சுகாதார இயக்கம் மூலமாக இத்திட்டம் அமல்படுத்தப் படும்.
இந்த திட்டத்தின் முதற் கட்டமாக தமிழகத்தில் 4 உணவு வீதிகளும், புதுச்சேரியில் 1 உணவு வீதியும் அமைக்கப்படும் என தெரிகிறது.