வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்சியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி பவித்ரா. இவர் கொரோனா காலத்தில் பணியாற்றி சம்பளம் ரூ.3 லட்சத்தை தன்னுடைய வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார், இதனுடன் சேர்த்து பே.டி.எம். செயலியின் மூலம் வங்கி கணக்கை இணைத்துள்ளார்.
மாணவி பவித்ராவின் தனியார் வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.3 லட்சம் மாயமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த மாணவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாணவியின் பணத்தை தனியார் வங்கி நிர்வாகமும், பே.டி.எம். நிர்வாகமும் தர மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி வழங்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். அப்போது வங்கி தரப்பில் வாதிடப்பட்டபோது மாணவி பவித்ராவின் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போகவில்லை, அவரது பே.டி.எம். கணக்கில் இருந்து தான் காணாமல் போனது என்று வங்கி தரப்பில் வாதிடப்பட்டது.
பே.டி.எம். தரப்பில் வாதிடப்பட்டபோது மாணவி பவித்ராவிற்கு தெரியாமல் யாரும் விவரங்களை பெற்று திருட முடியாது என்று வாதிடப்பட்டது, மேலும் ரிசர்வ் வங்கி தரப்பில் பே.டி.எம். மற்றும் வங்கி வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கி தலையிடுவதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா தலைமையிலான அமர்வு, ஒருவரையொருவர் மாறி மாறி பழி போடுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை, மேலும் பே.டி.எம். நிறுவனம் பொது மக்களிடம் உங்கள் சேவையை பயன்படுத்த விளம்பரம் செய்துவிட்டு பணம் பறிபோனால் அலைகழிக்கப்படுவது கண்டத்திற்குரியது என்று கூறினார்.
மேலும் இன்னும் இரண்டு வாரங்களில் மாணவி பவித்ராவின் வங்கி கணக்கிற்கு, பே.டி.எம். நிறுவனம் ரூ.3 லட்சத்தை செலுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறிய நீதிபதி, இதனை தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.