34 வருடங்களுக்கு முன்னர் கமல் கொடுத்த முத்தம்:இப்போது கிளம்பும் சர்ச்சை !
புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றுக்காக நடிகர் கமல் ரேகாவை அவரது அனும்தி இல்லாமல் முத்தமிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமல் ரேகா இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானதுதான். காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முன் கொடுத்துக் கொள்ளும் அந்த முத்தத்தை எந்த விரசமும் இல்லாமல் படமாக்கி இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த காட்சிக்காக கமல் மற்றும் பாலச்சந்தர் இருவரையும் இணைய உலகம் கண்டித்துள்ளது. அதற்குக் காரணம் நடிகை ரேகா.
அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், ‘அந்த முத்தக் காட்சி பற்றி இயக்குனரோ, கமல் சாரோ என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. அந்த ஷாட்டுக்கு முன்னதாக ‘கமலிடம், பாலச்சந்தர் நான் சொன்னது ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்.?’. அவர் ஆக்ஷன் சொல்லி, ஒன்-டூ-த்ரீ சொன்னதும் கமல் முத்தம் கொடுத்துவிட்டார். அதை எதிர்பார்க்காத நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.
அப்போது பாலச்சந்தரின் உதவியாளர்களாக இருந்த சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வசந்த் ஆகிய இருவரிடமும் இதுபற்றிக் கேட்டேன். இந்த பாடலில் அந்த காட்சி ஹைலைட்டாக இருக்கும். அந்த காட்சி நன்றாக இல்லை என்றால் சென்ஸாரில் இருந்து தூக்கிவிடுவார்கள் என்றார்கள். நான் ’சென்சார் என்றால் என்ன ?’ எனக் கேட்டேன். ஏனென்றால் அப்போது எனக்கு 16 வயதுதான்’ எனக் கூறினார்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரகாக, 16 வயது பெண்ணிடம் அவர் அனுமதி இல்லாமல் இப்படி நடந்து கொண்டது தவறு என கமல் மற்றும் பாலச்சந்தர் ஆகிய இருவருக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இது சம்மந்தமாக ரேகாவிடம் கமல், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வசந்த் ஆகியோர் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.