ஆட்டம் கண்ட இந்திய பேட்டிங்… சொதப்பிய பேட்ஸ்மேன்கள்! தாங்கி நிற்கும் புஜாரா !

0
142

ஆட்டம் கண்ட இந்திய பேட்டிங்… சொதப்பிய பேட்ஸ்மேன்கள்! தாங்கி நிற்கும் புஜாரா !

இந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 143 ரன்களை சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் இளம் தொடக்க ஜோடியான பிருத் வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்  இறங்கினர்.

முதல் டெஸ்டில் சொதப்பிய  பிருத்வி ஷா அதிரடியாக விளையாடினார். ஆனால் முந்தைய டெஸ்டில் சிறப்பாக விளையாடிய மயங்க் 7 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் வந்த புஜாரா விக்கெட்டை இழக்காமல் நங்கூரம் பாய்ச்சி நின்றார்.பிருத்வி ஷா அதிரடியாக அரைசதம் அடித்தார். ஆனால் அவர்  54 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வந்த கேப்டன் கோலி 3 ரன்களிலும், துணைக் கேப்டன் ரஹானே 7 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும்  ஹனுமா விஹாரி ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். களத்தில் இப்போது புஜாரா 47 ரன்களோடும் ஹனுமா விஹாரி 10 ரன்களோடும் ஆடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 143 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து தரப்பில் சவுத்தி அதிகபட்சமாக 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ட்ரண்ட் போல்ட் மற்றும் ஜேமிசன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

Previous articleஅசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா? வலுக்கும் கோரிக்கை! சிக்கலில் உடன்பிறப்புகள்!
Next articleடெல்லி வன்முறையை தூண்டுவதே எதிர்க்கட்சிகள்தான்! அமித்ஷா ஆவேசம்!