உங்க வீடு ஏசி இல்லாமலேயே குளுகுளுன்னு இருக்க இதோ ஈஸி டிப்ஸ்!!
இன்றைக்கு இருக்க கூடிய வெப்பமான சூழ்நிலையில் அனைவரும் உஷ்ணத்தால் பாதிக்கப் படுகின்றனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் , வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் கஷ்டபடுகின்றனர். இந்த கோடைகாலத்தில் ஏசி இல்லாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கான வழி முறைகளை பார்க்கலாம்.
வீடு வெப்பமாக இருப்பதற்கு முதல் காரணம் நம் அனைவரின் வீட்டில் உள்ள சீலிங் பேன்தான். சீலிங் பேனில் இருந்து காற்று வந்தாலும் கூட அது அனல் காற்றாகத்தான் வருகிறது. இதற்கு காரணம் பகல் முழுவதும் வெயிலினால் ஏற்படும் வெப்பத்தை மேலே உள்ள கான்கிரீட் கூரை உள்ளிழுத்து வைத்து இருக்கும். அதனால் கான்கிரீட் கூரையின் கீழ் உள்ள பேனை போடும்போது கூரையில் உள்ள வெப்பமானது மிக வேகமாக தரையில் இறங்குகிறது. இதனால் அறை முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்படும். இதை எப்படி தடுப்பது என்றால்.
மொட்டை மாடியில் வெயில் நேரடியாக படுவதை தடுக்க வேண்டும். அதற்கு மொட்டை மாடி முழுவதும் தற்காலிகமாக வெள்ளை சுண்ணாம்பு அடிப்பது ஒரு சிறந்த வழியாகும். இந்த வெள்ளை சுண்ணாம்பை மொட்டை மாடியில் அடிப்பதால் சூரிய ஒளி இந்த வெள்ளை நிறத்தை பிரதிபலிக்கும். அதனால் வெயிலின் தாக்கம் நேரடியாக விழுவது தடுக்கப்படும். இதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை 75% வரை குறைக்க முடியும்.
அடுத்ததாக மொட்டை மாடியில் பசுமை குடில்கள் அமைக்கலாம். தென்னை ஓலைகள் மற்றும் பனை ஓலைகளை போடலாம். துணிகளை போட்டும் மாடியில் வெயில் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
முடிந்த அளவிற்கு சீலிங் பேனை தவிர்த்து விட்டு டேபிள் பேனை பயன்படுத்தலாம். அதே போல் டேபிள் பேனின் பின்புறம் ஒரு 2 அடி தூரத்தில் ஒரு வாளியில் நீரை நிரப்பி வைப்பதால் பேனில் இருந்து வரும் காற்றானது குளிர்ந்த காற்றாக வரும். அதுவே வாளியில் ஐஸ்கட்டிகளை போட்டு வைத்தால் ஏர் கண்டிஷனர் காற்று போல் மிகவும் குளிர்ச்சியாக வரும்.
அடுத்து ஜன்னல் மற்றும் வாசலில் ஈரத்துணிகளை தொங்க விடுவதன் மூலம் வெப்பத்தை குறைக்க முடியும்.
நீங்கள் தரையில் படுப்பவராக இருந்தால் தரையை ஈரத்துணி போட்டு துடைத்து விட்டு படுக்கலாம்.
அறையில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்ற எக்ஸாசிட் பேனை (Exhaust Fan) பயன்படுத்தலாம். இந்த பேன் மூலமாக அறையில் இருக்கும் வெப்ப காற்று வெளியேற்றப் படும்.
மாலை நேரங்களில் மொட்டை மாடி முழுவதும் தண்ணீர் ஊற்றி விடுவதன் மூலம் ஒரு மணி நேரத்திலேயே வீடு முழுவதும் குளிர்ச்சியாகி விடும்.
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் இந்த கோடை காலத்தில் வீட்டிலுள்ள வெப்பத்தின் அளவை குறைக்கலாம்.