தமிழரை பிரதமர் வேட்பாளர் ஆக்குங்கள்! உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!
தமிழர்களில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜக கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.
நாகர்கோவில் மாவட்டத்தில் மண்வளமே மக்கள் நலம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாகராஜா கோவில் திடல் அருகே நேற்று(ஜூன்14) இரவு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலூமை தாங்கி பேசினார்.
இந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் “உலகத்தில் எவன்.உயர்ந்த மனிதன் என்றால் கீழே விழுந்து கிடப்பவனை குனிந்து கைதூக்கி மேலே எழுப்பி விடுகிறானோ அவனே உயர்ந்த மனிதன். இந்த தத்துவம் உருவாவதற்கு முன்னரே புரட்சியாளர் வைகுண்டர் “தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம்” என்று கூறினார்.
மார்ஷல் நேசமணி அவர்கள் இந்த மண்ணை மீட்க போராடினார். அவருடைய பேரன், பேத்திகளான நாம் இந்த மண்ணை காக்க போராடிக் கொண்டிருக்கிறோம். மதம், சாதி, கடவுள் பற்றி பேச பல அரசியல் கட்சிகள் உள்ளது. மனிதனை பற்றி பேசுவதற்கு நாம் மட்டும் தான் இருக்கிறோம்.
ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். மரத்தை வளர்க்தலாம். நீர் தேக்கத்தை உருவாக்கலாம். ஆனால் மலையை அழித்தால் எப்படி உருவாக்க முடியும். மலை வளம் தான் மழை வளம். மேற்கு தொடர்ச்சி மலை இல்லாமல் போனால் எப்படி மழை பெய்யும். ஏறக்குறைய மலைகளை முடித்து விட்டார்கள். கேரளாவில் இருக்கும் மலைகளை அகற்றி ஏன் கற்கள் எடுக்கவில்லை. ஏன் என்றால் கேரளாவில் இருப்பவர்கள் மண்ணை நேசிக்கிறார்கள். ஆனால் இங்கு உள்ளவர்கள் காற்று, நீர், மலை நாசமானால் பரவியில்லை பணம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள்.
காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். கடல் அலை மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். காற்றாலை தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தை அதானிக்கு கொடுத்துள்ளனர். நாட்டை நாசமாக்கும் அனு உலை, அனல் மின் உற்பத்தியை அரசின் கைவசம் உள்ளது.
உயிரை காக்கும் மருத்துவம், கல்வி, தண்ணீர் ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றது. சாராயத்தை அரசு விற்பனை செய்கின்றது. சாராயத்தை குடித்து இறந்தால் 10 லட்சம் நிவாரணம் என அரசு அறிவித்துள்ளது. அதிகம் பேர் 10 லட்சும் ரூபாயை வாங்குவதற்கே கள்ளச் சாராயத்தை குடித்து இறந்து விடுகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி வந்த பிறகு நிறைய கள்ளச் சாராயம் வந்துவிட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டு மக்கள் இயல்பான நிலையில் இல்லை. செந்தில் பாலாஜி அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாததால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். பின்னர் எதற்கு மீண்டும் காவேரி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். செந்தில் பாலாஜி அவர்கள் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொழுது செய்த ஊழலுக்க தற்பொழுது சோதனை நடத்தப்படுகிறதாம். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த ஊழலுக்கு தற்போது எதற்கு சோதனை நடத்த வேண்டும். இவ்வளவு நாட்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
தமிழர் ஒருவரை பிரதமராக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் அப்படி என்றால் தமிழர் ஒருவரை வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துங்கள். உங்களுக்கு(ப.ஜ.க) நாங்கள் ஓட்டு போடுகிறோம்.
காங்கிரஸ் ஆட்சியும் பா.ஜ.க ஆட்சியும் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் எதற்கு தேவை என்று ஒரே ஒரு சரியான காரணத்தை கூறுங்கள். நாம் தமிழர் கட்சியை நான் கலைத்து விட்டு காங்கிரஸ் அல்லது பா.ஜக இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து விடுகிறேன். காங்கிரஸ் கட்சி இனத்தின் எதிரி என்றால் பா.ஜ.க கட்சி மனித குலத்தின் எதிரி.
கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும். அதை நீங்கள் செய்வீர்களா. தற்பொழுது கொடுக்கப்படும் கல்வி தரம் இல்லாமல் இருக்கின்றது. குமரியை சேர்ந்த அமைச்சரின் மகன் அரசு கல்லூரியில் படிப்பாரா” என்று அந்த பொதுக்கூட்டத்தில் சீமான் அவர்கள் பேசினார்.