சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்!
2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
மகளிருக்கான 7 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணி இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் விதிப்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனை தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதியைப்பயன்படுத்திய நடுவர்கள் போட்டியை 13 ஓவர்களாக குறைத்தனர்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. ஆண்கள் கிரிக்கெட் உலகைப்போல் மகளிர் கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலியா 4 முறை இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த முறை தனது சொந்த மண்ணில் இறுதிப் போட்டியை விளையாட உள்ளது, அந்த அணிக்கு பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொடக்கம் முதலே இந்த தொடரில் அசத்திவரும் இந்திய அணி இருபது ஓவர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இத்தொடரின் முதற்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வென்று தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாகவும் விளங்கிவருகிறது.
வரும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தன்று மெல்போர்ன் நகரில் நடக்கும் இறுதிப்போட்டியில் சிங்கத்தின் குகையில் சிங்கத்தை சந்திக்கும் இந்திய மகளிர் கோப்பையை வென்று சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..