பெண்களுடன் சேர்ந்து நாற்றுநட்ட முதல்வர்! ‘காவிரி காப்பாளன்’ பட்டம் கொடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!!
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் சார்ப்பில் பாராட்டு விழா நடத்தி “காவிரி காப்பாளன்’ என்ற பட்டப் பெயரும் சூட்டப்பட்டது.
விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமசோதாவாக அதிமுக அரசு நிறைவேற்றியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருவாரூர் மாவட்டம் அருகேயுள்ள கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி பகுதியில் இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த பாராட்டு விழாவிற்கு சென்ற எடப்பாடி மக்களுடன் விவசாயம் குறித்து நடந்தபடியே உரையாடி சென்றபோது, அங்கு வயலில் நாற்றுநடும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்தவுடன் முதல்வர் எடப்பாடியும் வயலில் இறங்கி பெண்களுடன் நாற்றுநட ஆரம்பித்தார். இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.
கோடைகால சாகுபடிக்கான விவசாய நடவுப்பணியின் போது எடப்பாடியும் களத்தில் இறங்கியது விவசாயிகளிடமும் பொது மக்களிடமும் ஆச்சரியத்தையும், புதுவித மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
விவசாயிகள் ஒன்றிணைந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் எதிர்கால விவசாயத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்த முதல்வருக்கு ” காவிரி காப்பாளன்” என்று பட்டம் கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்விற்கு மாட்டுவண்டியில் சென்று எடப்பாடி எல்லோரையும் அசத்தினார். தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்காலம் ஓரளவு அதிமுகவின் அரசால் மகிழ்ச்சி தரக்கூடிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.