இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகை!! இனிமேல் பயமின்றி செல்லலாம் !!
தமிழ்நாட்டில் இனிமேல் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் காவல்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பெண்கள் பயணிக்கும் பொழுது அவர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையின் ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக காவல்துறை பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் படி மாநில முழுவதும் உள்ள பெண்கள் தனியாக பயணிக்கும் பொழுது அதாவது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பு குறைவு என கருதும் வேளைகளில் காவல்துறையின் உதவி எண்களை அணுகலாம்.
இந்த உதவி எண்களில் அழைத்து தொடர்பு கொள்ளும் காவலரிடம் சம்பந்தப்பட்ட பெண்கள் தங்களது பாதுகாப்பின்மை நிலைமையை எடுத்துக் கூறி தாங்கள் இருக்கும் இடத்தை தெரிவித்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தின் ரோந்து வாகனம் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த வாகனமானது பெண்கள் இருக்கும் இடத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். மேலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த சேவைகளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள் இந்த இலவச சேவையை 1091,112 என்ற இலவச தொலைபேசி எண்கள் மூலமாகவும், அடுத்து 044- 23452365, 044 – 28447701 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு மேற்கண்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த சேவைகள் அனைத்தும் பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.