சென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!
சென்னையில் எப்போதும் பிஸியாகவே இருக்கும் இடத்தில் ஒன்று தான் இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இங்கு தினமும் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்பவர்கள் என்று எப்போதும் கூட்டமாகவே இருக்கும்.
இங்கு சுமார் 12.51 மணியளவில் மாநிலக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சரியாக இரண்டு மணியளவில் வெடிக்கும் என்றும் கூறி உள்ளார்.
இந்த தகவல் குறித்து உடனடியாக சென்னை புறநகர் காவல் நிலையத்திற்கும், ரயில்வே போலீசாருக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார்களும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைபோலவே ஏப்ரல் 25 ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், அன்று சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது வந்த தொலைப்பேசி எண்ணும் அதே எண்ணில் வந்துள்ளதால் போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அழைப்பு வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியில் இருந்து வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். சென்றமுறை அழைப்பு விடுத்த நபர் மன நலம் சரி இல்லாதவர் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு வைத்தனர்.
அந்த வகையில் தற்போது வந்த அழைப்பு அதே நபரிடம் இருந்து வந்துள்ளதா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.