லிவிங் டு கெதரில் வாழ்ந்த போது இருந்த காதல் கல்யாணத்தில் காணாமல் போனது!! கணவன் மனைவி இருவரும் தர்ணா காரணம் தான் வேறு வேறு !!
தன்னுடைய கணவனுடன் சேர்த்துவைக்க கோரி இளம்பெண் ஒருவர் கணவன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டை பூட்டிச் சென்ற கணவன் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி வயது 60. இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு ஜூலி வயது 55, என்ற மனைவியும், விக்னேஷ் வயது 23 என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.
அதே போல சென்னை தரமணியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மகள் தீபிகா வயது 23. இவர் அங்குள்ள கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். விக்னேஷ் 2021-ஆம் ஆண்டு கோவையில் தங்கி எம்பிஏ படிக்கும் போது அவருக்கும் தீபிகாவிற்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் மேற்படிப்பிற்கு திருச்சியில் ஒரே வீட்டில் தங்கி படித்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு முதல் விக்னேஷ் திருச்சி வீட்டிற்கு செல்வதும் இல்லை. தீபிகாவை தொடர்பு கொள்வதும் இல்லை. இதனால் மனமுடைந்த தீபிகா தனது காதலனை தேடி சேலம் வந்தார். அங்கு அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிடம் அளித்த மனுவில் விக்னேஷும் அவரும் 3ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கூறினார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த வழக்கை ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். இருவீட்டரையும் போலீஸ் அழைத்து பேசியதில் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சென்னை சென்று ஒரு மாதம் வரை மாமனார் வீட்டில் தங்கியிருந்தார்.
இதையடுத்து ஆத்தூர் சென்று வருவதாக கூறிய விக்னேஷ் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் மீண்டும் ஆத்தூர் வந்த தீபிகா கடந்த 3 நாட்களாக கணவனுடன் சேர்ந்து வாழ அவரின் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். இதில் நேற்று வீட்டினை பூட்டிச் சென்ற விக்னேஷ் தனது தாய் தந்தையுடன் ஆத்தூர் காவல் நிலையம் முன்பு தனது பெற்றோர் உடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
அவரிடம் இன்ஸ்பெக்டர் பேச்சு வார்த்தை நடத்தவே அவர் கூறியதாவது,
நானும் தீபிகாவும் சமூக வலை தளத்தில் நட்பாகி காதலித்தோம். பின்பு அவரை பிடிக்காமல் போனதால் விலகி விட்டேன். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் புகார் கொடுத்ததால் இன்ஸ்பெக்டர் கட்டாயத்தின் பேரில் தாலி கட்டினேன். 2 நாட்களுக்கு பின்னர் தீபிகாவின் உறவினர்கள் கதவை உடைத்து எனது சகோதரியை தாக்கினர்.
எனக்கு அவருடன் வாழ விருப்பமில்லை எனவே சென்று விட கூறியும் கேட்காமல் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார் என தெரிவித்தார். பின் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீடு திரும்பினார். நாலாவது நாளாக கணவன் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி வரும் தீபிகா கூறியதாவது,
ஆத்தூரைச் சேர்ந்த நாங்கள் சில ஆண்டுகளாக சென்னையில் குடியிருந்து வருகிறோம். 2020-ல் விக்னேஷை காதலித்து இருவரும் திருச்சியில் ஒன்றாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்தோம். பின் சென்னை ஐடி யில் வேலை பார்க்கும் போது எங்கள் வீட்டில் நெருக்கமாக வாழ்ந்தோம். பின்னர் 2022-ல் பிரிந்து சென்றதால் தரமணியில் புகார் கொடுத்தேன். கடந்த ஏப்ரல் ஆத்தூர் போலீசார் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் அவர் மீண்டும் பிரிந்து சென்றதால் அவரது வீட்டிற்கு வந்தேன். வீட்டினுள் விடாததால் வெளியில் வெளியே தங்கி இருக்கிறேன். 2 தினங்களுக்கு முன் வீட்டினை பூட்டிச் சென்றதால் கதவை உடைத்து சென்றேன். இதற்கு என்மேல் பொய்யான புகார் கொடுத்துள்ளனர்.
அவரது குடும்பத்தினர் என்னிடம் வரதட்சணை கேட்டு மிரட்டி வருகின்றனர். எத்தனை நாளானாலும் விக்னேஷ் உடன் தான் சேர்ந்து வாழ்வேன் அதில் மாற்று கருத்து இல்லை. அதுவரை போராட்டம் தொடரும் என கூறினார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபிகாவை அழைக்கவே சேலம் வருவதாக கூறி இருந்த நிலையில் இன்றும் விக்னேஷ் வீட்டின் முன் சேர்த்து வைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக தீபிகா கூறியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.