டைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டனும் தற்போது இல்லை!!110 ஆண்டுகளை கடந்தும் தொடரும் துரதிர்ஷ்டம் !!
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியது. அதிலிருந்த 5 சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தனர்.
கடந்த 100 வருடங்களுக்கு முன்னால் அதாவது கி.பி 1912 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கிய உலகபுகழ்ப் பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே சோகத்தை சந்தித்தது. இது இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட இந்த பிரம்மாண்ட கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே பனிப்பாறைகளில் மோதியதில் அங்கேயே ஜல சமாதி ஆனது.
இதில் பயணம் செய்தவர்களில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். அந்த கப்பலின் உடைந்த எஞ்சிய பாகங்கள் வட அட்லாண்டிக் கடலில் அமெரிக்காவின் நியூபவுண்ட்லாந்து தீவில் இருந்து சுமார் 600கி.மீ தொலைவில் அடியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் கிடக்கின்றன.
விபத்து நடந்து நூறாண்டுகள் ஆனாலும் இந்த கப்பல் விபத்து பற்றிய மக்களின் ஆர்வம் இன்னும் குறைந்தபாடில்லை. இதை அடிப்படையாக கொண்டு 1997-இல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் படம் உலகமெங்கும் வசூலை வாரி குவித்தது. மேலும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இன்னும் கப்பல் குறித்த விவரங்களை கடலுக்குள் சென்று பார்வையிட்டு தகவல் சேகரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
மக்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்ட ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ் டைட்டானிக் கப்பலின் மிச்சங்களை காண சுற்றுலா ஏற்பாட்டினை 2021 அன்று தொடங்கியது. இதற்காக 22 அடி நீளம் மட்டுமே கொண்ட 5 பேர் மட்டும் பயணிக்க கூடிய டைட்டான் என்ற சிறிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. டைட்டானிக் கப்பலை நோக்கி ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்ளும் நபர்கள் நீர்மூழ்கியின் காட்சி வழியே அந்த கப்பலின் உடைந்த பகுதியை ரசிப்பார்கள்.
இந்த முறை டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 5 கோடீஸ்வரர்கள் டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்றனர். போலார் பிரின்ஸ் என்ற கப்பலின் மூலம் இவர்கள் 5 பேரும் டைட்டன் கப்பலுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் கடலுக்குள் இறக்கிவிடப் பட்டனர். மாலை நேரத்திற்குள் மீண்டும் இவர்கள் கப்பலில் திரும்ப வேண்டும் என திட்டமிடப்பட்டது.
ஆனால் 4கி.மீ ஆழத்தை நோக்கி பயணம் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் கப்பலுடன் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அமேரிக்கா, கனடா நாட்டின் கடலோர காவல் படை கப்பல்கள், வணிக கப்பல்களும் குறிப்பிட்ட பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கின. கடல் சமிக்ஞை கண்டுபிடிக்கும் மிதவைகளும் போடப்பட்டன.
ஆனால் நீர்முழ்கியில் இருந்து எந்த தகவலும் இல்லை. மேலும் அதில் இருக்கும் ஆக்சிஜன் சப்ளை 96 மணி நேரத்திற்கு தான் தாங்கும் என சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு நீர்முழ்கியின் எஞ்சிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் தேடுதல் பணிகளுக்கு அது கடலில் வெடித்து சிதறி அதில் உள்ள 5 பேரும் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டைட்டன் கப்பலின் பாதுகாப்பு தன்மை போதிய அளவு சோதிக்க படவில்லை என நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ள போதும் 110 ஆண்டுகளை கடந்தும் டைட்டானிக் கப்பலின் துரதிர்ஷ்டம் தொடர்ந்து வருவதை காண முடிகிறது.