தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் மின் கட்டண உயர்வு!! மக்கள் எதிர்ப்பு!!
தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த அதிரடி மின் உயர்வால் தொழிற்சாலை நிறுவனங்களும் , வணிக நிறுவனங்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை எதிர்த்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மின்சாரத்தை பயன்படுத்தும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை அரசு அமல்படுத்த இருக்கிறது.
பொதுவாக, மின்சாரத்தை ஒரு நாளின் எந்த நேரத்தில் பயன்படுத்தினாலும் ஒரே விதமான கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில்தான் அரசு மாற்றம் கொண்டு வருகிறது. அதாவது, அதிக அளவு மின்சார பயன்பாட்டு நேரத்தில், காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் மின் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.இதையடுத்து, மின்கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீட்டின் இணைப்புகளுக்கு எந்தவித கட்டணம் உயர்வும் இல்லை எனவும், விவசாயம் மற்றும் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இந்த அதிரடி மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டுமென பல்வேறு தரப்பிலும், அரசியல் கட்சிகளும் எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.