விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் லப்ரானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்திய கிரிக்கெட் வீரரான பிரவீன் குமார். இவர் இந்திய அணி கிரிக்கெட்டில் 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார்.
இவர் ஏராளமான போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் இவர் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 27 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதேபோல் 68 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 77 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். தற்போது பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் இருவருக்கும் நேற்றிரவு விபத்து நேர்ந்துள்ளது.
பாக்பத் சாலையில் உள்ள முல்தான் நகர் பகுதியில் பிரவீன் குமார் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு 10 மணிக்கு தன்னுடைய லேண்ட் ரோவர் டிப்பெண்டர் வாகனத்தில் பாண்டவ் நகரிலிருந்து தன்னுடைய மகனுடன் காரில் வந்து கொண்டிருக்கும் போது, அவர் காரின் மீது ஒரு கனரக வாகனம் மோதி விட்டது.
இந்த விபத்து மீரட்டில் உள்ள கமிஷனர் குடியிருப்பிற்கு அருகே நடந்துள்ளது. இதனால் பிரவீன் குமாரின் கார் கண்ணாடி உடைந்து விட்டது. இருப்பினும் இவருக்கும் இவரது மகனுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து சிவில் லைன் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கனரக வாகன ஓட்டுனரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கிரிக்கெட் வீரரான பிரவீன் குமார் இது போன்று விபத்தில் சிக்குவது முதல் முறை இல்லை. ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு மீரட்டில் தனது சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பின் போது, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரின் ஜீப்பில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். ஆனால் அதில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுபோலவே தற்போது ஏற்பட்ட விபத்திலும் இவர் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.