போலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!!
நாகர்கோயில் சைபர் கிரைம் போலீசாரால் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் தான் கனல் கண்ணன். இவர் பல படங்களில் சண்டை காட்சிகள் தோன்றி பிரபலமானவர். மேலும் இவர் தற்போது இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளராக செயல்பட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் பாஜகவின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சர்ச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்னணை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சமீபத்தில், மதபோதகர் ஒருவர் இளம்பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் விடியோவை ட்விட்டர் வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த விடியோவில் மத போதகர் நடனம் ஆடுவது போலவும் அதன் பேக்ரவுண்ட்ல் தமிழ் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பது போலவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதான் மக்களின் மதமாற்றத்தின் தற்போதைய நிலை என தெரிவித்திருந்தார்.
அவரின் இந்தப் பதிவு கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவரின் இந்தப் புகாரின் அடைப்படையில் 2 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நேரில் ஆஜராக வந்த கனல் கண்ணனிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் திடீரென கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் நாகர்கோவில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.