மாணவர்களுக்கு கலைஞரின் “சமூக நீதி வரலாறு” பாடத்திட்டம்!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!
தற்போது தமிழ்நாட்டில் திமுக அரசானது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பான வகையில் கொண்டாடி வருகிறது.
இதற்காக “சமூக நீதிகாவலர்- கலைஞர்” என்னும் தலைப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி உள்ளார். இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களான பொன்முடி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி சமூகத்திற்காக கருணாநிதி அவர்கள் ஆற்றிய பணிகளை இக்கால இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் இந்த சமூகநீதிக்குழு அமைக்கப்பட்டது என்று கூறினார்.
எனவே, அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு சேர்க்கப்படும் என்று கூறினார்.
இக்கால இளைஞர்கள் பெண்ணுரிமை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமை என அனைத்தையும் தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்திய பிறகு இதற்கான நடைமுறை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும், இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்த உள்ளதாகவும் கூறி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதல்வர் கூறி இருந்தார்.
அதன்படி, கோவை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வால்மார்ட் நிறுவனம், தமிழக வழிகாட்டி நிறுவனம் மற்றும் உயர் கல்வித்துறை என அனைத்து ஒப்பத்தங்களும் போடப்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி கூறினார்.