பாகிஸ்தான்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த இளம் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்களுக்கி சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் இதுவரை 850-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. குறிப்பாக அங்கிருக்கும் சிந்து மாகாணத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதோடு அங்கு மட்டுமே அதிகபட்சமாக 394 பேரை பாதித்துள்ளது.
இந்த சூழலில், கில்ஜித் பலுசிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் உஷாமா ரியாஸ் என்ற இளம் மருத்துவர் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்றி வந்ததால் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை அளிபக்கப்பட்டு வந்தார். பின்னர் தீவிர சிகிச்சை பலனின்றி உஷாமா ரியாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். எத்தனையோ நோயாளிகளை காப்பாற்றிய மருத்துவரின் இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் மருத்துவரின் உயிரிழப்பு எப்படி நடந்தது என்று கேட்டபோது, கொரோனா தொற்று நோயாளிகளை கவனிக்க சரியான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாக்கிஸ்தானில் இன்றுவரை ஒரு இளம் மருத்துவர் உட்பட 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.