உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மத்திய அரசு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மக்கள் இதனால் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் ஒன்று கூடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி காய்கறிகளை விற்கக் கூடாது என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் திறந்தவெளியில் காய்கறி கடைகளை எவ்வாறு அமைப்பது என்று வியாபாரிகளுக்கு எடுத்து கூறப்பட்டுள்ளது. இதனை வீடியோவாக எடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ரயில்வேத்துறை பொதுமக்களுக்கு இதுபோன்ற சேவைகளை தொடர்ந்து வழங்கும் என்று அதில் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பொது மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.