சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உயிர்களைக் கொன்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோய் தொற்று அபாயகரமாக பரவி வருவதால் பல நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
சீனாவில் இந்த நோய் பரவ ஆரம்பித்தாலும் அந்த நாடு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வேகமாக நோயாளிகளை குணப்படுத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு முன்பு சீனாவில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை என்ற தகவல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கி பூரண குணமடைந்த வூஹான் மாகாணத்தை சேர்ந்த சிலருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர்களை மருத்துவ பரிசோதனை செய்ததில் ஏற்கனவே நோய் தொற்று ஏற்பட்டு குணம் ஆகியவர்களையே 5% முதல் 10% மீண்டும் வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த தகவலை கேட்ட மருத்துவ நிபுணர்கள் கொரோனா வைரஸ் சீனாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது என்று பதறவைக்கும் விதமாக கருத்து கூறியுள்ளனர்.