திமுக தலைவர் ஸ்டாலினை நலம் விசாரித்த பிரதமர் மோடி!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை இந்த கொரோனா வைரஸால் 3,300 நபர்களுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 70 நபர்களுக்கும் மேல் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதில் ஒரு பகுதியாக கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களிடம் சமூக விலகலை கடைபிடிக்குமாறு பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அடுத்த கட்டமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 24 உறுப்பினர்களை கொண்டுள்ள திமுகவின் தலைவர் ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலான தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது ஸ்டாலின் மற்றும் அவரது தாயார் தயாளு அம்மாள் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார் என்றும் கூறப்படுகிறது.பதிலுக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் பிரதமர் மோடி அவர்களிடம் நலம் விசாரித்தார் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பாக டி.ஆர். பாலு கலந்து கொள்வார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்றும், நாட்டில் சுகாதார நிலைமை சீரடைய தேவையான யோசனைகளை வழங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.