கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும்? அதிர்ச்சியளிக்கும் தகவல்
உலகப் பொருளாதாரம் இப்பொழுதே கதிகலங்கி விட்டதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. உலகின் பல நாடுகளும் எப்பொழுதும் காணாத ஒரு ஷட்டவுன் (Shutdown) காலத்தில் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றன. பணக்கார மேற்கு நாடுகளும், வளரும் பொருளாதாரத்தை உடைய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும் அவற்றின் வரலாற்றில் இல்லாத பொருளாதார முடக்கத்தை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. இந்தப் பொருளாதார முடக்க நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடருமேயானால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை உலகம் சந்திக்கும் என்று பல பொருளாதார வல்லுனர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
2008 பொருளாதார மந்தநிலையை விடவும் இது மோசம்
அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சில நிகழ்வுகளால் உலகமே பெரிய பொருளாதார மந்தநிலையை சந்தித்தது. இதனை ஆங்கிலத்தில் “The Great Recession of 2008” என்று அழைக்கிறார்கள். வங்கிகள் தங்களது ரியல்எஸ்டேட் பரிவர்த்தனையில் பெரிய அளவில் குளறுபடிகள் செய்ததால் இந்த பொருளாதார மந்த நிலை 2008-ம் ஆண்டு ஏற்பட்டது. வங்கிகளை மட்டுமல்லாது அது சார்ந்த பல துறைகளிலும் இந்த பொருளாதார மந்த நிலை எதிரொலித்து அதன் காரணமாக பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். அமெரிக்காவில் மட்டுமே சுமார் 6 லட்சம் பேர் வரை உடனடியாக வேலை வாய்ப்பை இழந்தனர். மொத்த உலகில் சுமாராக 80 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர் என்று சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
உலகம் இப்பொழுது பொருளாதார மந்த நிலையில் உள்ளதா?
27 மார்ச் 2020 ஆம் ஆண்டு அன்று அனைத்துலக நாணய நிதியம் (IMF) உலகம் பொருளாதார மந்த நிலையை அடைந்து விட்டதாகவே தனது அறிக்கையில் கூறியது. இன்னும் ஒரு படி மேலே சென்று 2008-ம் ஆண்டின் பொருளாதார மந்த நிலையை விட இந்த மந்த நிலை மிக மோசமானதாக இருக்கும் என்று கணித்துள்ளது. 2020 மார்ச் மாத நடுவில் இருந்து ஏப்ரல் முதல் தேதி வரை, இரண்டு வார காலத்தில் அமெரிக்காவில் மட்டுமே மொத்தம் 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்து இருக்கிறார்கள் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தரவு ஒன்றினை வெளியிட்டது.
இது அவர்கள் வரலாற்றிலேயே இல்லாத அளவு என்பது திகைப்புடன் பார்க்கப்படுகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்காவோ, உலகின் மற்ற நாடுகளோ இன்னும் மீளவில்லை என்பது. அதாவது நிலைமை இன்னும் மோசமடையும் என்பதே. வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஒரு பக்கம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் ஒன்று-இரண்டு மாத காலத்தில் இந்தியாவில் உயிரிழப்புகள் இன்னும் கூட அதிகமாக இருக்கும் என்று பல தரவுகள் சுட்டிக்காட்டி நம்மை அச்சமூட்டுகின்றன.

இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுமா?
சந்தேகமே இல்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னான இந்திய பொருளாதாரம் மோசமாக இருக்கும் என்று பலராலும் கணிக்கப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து ஏறக்குறைய 90 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகள் வெளியே சென்று விட்டதாக அனைத்துலக நாணய நிதியம் (IMF) கூறுகிறது. இந்த நிதியம் தன் கீழ் உள்ள பிரத்தியேக போர்க்கால கருவூல (War chest) பணமான ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை வளரும் நாடுகளுக்கு கடன் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறது. இது ஓரளவு ஆதரவான செய்தி என்றாலும், இதிலிருந்தே நிலைமை எவ்வளவு மோசமாகப்போகிறது என்றும் நாம் யூகித்துக் கொள்ளலாம்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா மிகப்பெரிய ஒரு நெருக்கடியை தற்போது சந்திக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் அவர்கள் கூறுகிறார். “2008 பொருளாதார மந்தநிலை மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், சில துறைகளில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை தட்டிப் பறித்தாலும், அப்போது வேலைகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன, ஒரேடியாக முடங்கிவிடவில்லை, நாடும் அப்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டுதான் இருந்தது. அது மட்டுமில்லாமல் நமது பொருளாதார அடிப்படை ஓரளவு உறுதியாக அப்போது இருந்தது. அந்த நிலைகள் எதுவுமே தற்போது இல்லை”, என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.
சரியும் பொருளாதாரத்தை மீட்க என்னதான் வழி?
இந்தியா மிக விரைவாக அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்ற பரிசோதனையை உடனே மேற்கொள்ள வழிவகை வேண்டும். இந்த புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெற்றால், நாட்டின் எந்தெந்த வட்டாரங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று சுலபமாக கண்டறிய முடியும். இந்த வட்டாரங்களை மட்டும் அடுத்த கட்டத்தில் முடக்கி வைத்து மற்ற வட்டாரங்களை வழக்கம்போல் இயங்கச் செய்வதன் மூலம் மெல்லமாக பொருளாதாரத்தை அதன் தற்போதைய தேக்க நிலையிலிருந்து மீட்டெடுக்கலாம்.
இப்படி செய்வதன் மூலம் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளியவர்கள் தங்கள் அன்றாட கூலிக்கு வழிவகை செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய முடக்க நிலையை இது ஓரளவு சரிசெய்யும் என்று நம்பப் படுகிறது. ஆனால் பொருளாதாரத்தை முழு வீச்சில் இயங்க வைக்க இந்த நடவடிக்கைகள் பத்துமா? இப்போதைக்கு இந்த shutdown முடிந்தவுடன் அரசு என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்.
( தொடரும்….)