என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!
பொதுவாக ஊழியர்கள் என்றாலே ஏதாவது ஒரு சாக்குபோக்கு கூறி லீவு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் என்பது நிதர்சனம்.ஆனால் இங்கு ஒரு ஊழியர் கடந்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியை செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தான் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி டேட் கவுன்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பர்கர் கிங்’ நிறுவனதிற்கு 20000 கிளைகள் உள்ளது.இதில் ஒரு கிளை
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அமைந்துள்ளது.இந்த ஹோட்டலில் பல ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.அதில் கெவின் போர்டு (54) என்ற ஊழியர் கடந்த 27 ஆண்டுகளாக இந்த ஹோட்டலில் பணி புரிந்து வந்துள்ளார்.இதில் சிறப்பு என்னவென்றால் அவர் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து ஓய்வுபெறும் வரை ஒருநாள் கூட விடுப்பு எடுக்காதது தான்.இதனை பாராட்டும் வகையில் பர்கர் கிங் நிறுவனம் ஒரு சின்ன பரிசை வழங்கியுள்ளது.இதனால் ஏமாற்றமடைந்த அவர் பர்கர் கிங் நிறுவனம் வழங்கிய பரிசை இணையத்தில் வெளியிட்டார்.இது குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் பலரும் பர்கர் கிங் நிறுவனத்தின் அற்ப பரிசை குறித்து விமர்னசம் செய்தனர்.
இதையடுத்து கெவின் போர்டு மகள் செரினா தனது தந்தைக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார்.அதன் படி தனது தந்தைக்கு நிதி திரட்ட முடிவு செய்த செரினா இது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.இந்த வீடியோ பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டி போட்டு கொண்டு பணத்தை வாரி வழங்கினர்.இதையடுத்து கடந்த சில மாதங்களில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.3 கோடி வரை நன்கொடையாக சேர்ந்துள்ளது.இதை சற்றும் எதிர்பார்க்காத செரினா இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததை கண்டு உணர்ச்சிவசப்பட்டார்.
இது குறித்து அவர் கூறும்போது,எனக்கும் என்னுடைய உடன் பிறப்புகளுக்கும் கடந்த 27 வருடங்களாக உழைத்த தனது தந்தைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏதாவது செய்ய விரும்பினேன்.அந்த வகையில் தனது தந்தையின் ஓய்வு காலத்திற்கு பயன்பெறும் வகையில் நிதி திரட்ட ஆரம்பித்தேன்.ஆனால் நினைத்து கூட பார்க்கமுடியாத அளவிற்கு நன்கொடை கிடைத்துள்ளது.தங்கள் குடும்பத்தின் சார்பில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மேலும் இது குறித்து கெவின் போர்டு கூறும்போது,பொதுமக்கள் மிகப்பெரிய தொகையை நன்கொடையாக அளித்திருக்கிறார்கள் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை.பர்கர் கிங் மட்டுமல்ல பல நிறுவனங்கள் உண்மையான ஊழியர்களுக்கு உரிய மதிப்பை கொடுப்பதில்லை என்பதை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கின்றது.ஆனால் எனது உழைப்பை பாராட்டி அமெரிக்க மக்கள் நன்கொடைகளை வாரி வழங்குவதைப் பார்க்கும் பொழுது நெகிழ்ச்சியாக இருக்கின்றது.அவர்களுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக செலுத்துகிறேன்.அவர்கள் வழங்கிய இந்த நன்கொடை எனது ஓய்வு கால வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.