தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!!
மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில் மாணவ மாணவியர் குறைவான மதிப்பெண் பெற்றதால் பிரம்பை கொண்டு வேதியியல் ஆசிரியர் மாணவர்களை அடித்து இரத்த காயம் ஏற்படுத்தினர். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருமலையான்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பள்ளியில் சில நாட்களுக்கு முன்னர் இடைத்தேர்வு நடைபெற்றது.
இந்த இடைத் தேர்வு கணினி அறிவியல் பிரிவில் பதினோராம் வகுப்பு படிக்க்கும் 27 மாணவ மாணவியர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். 50 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வில் ஒரு மாணவியை தவிர மற்ற 26 பேரும் குறைவான மதிபெண்களே பெற்றுள்ளனர்.
இதையடுத்து மாணவ மாணவியர் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த வேதியியல் ஆசிரியர் அனைவருக்கும் வினாத்தாளை வீட்டுப் பாடமாக கொடுத்து பயின்று வர கூறியுள்ளார். இதையும் பலர் செய்யாததால் வேதியியல் ஆசிரியர் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்து நேற்று(ஆகஸ்ட்18) பள்ளிக்கு வந்த வேதியியல் ஆசிரியர் மாணவ மாணவியரை அழைத்து இரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு பிரம்பைக் கொண்டு கை, கால், முதுகு, தொடை ஆகிய பகுதியில் அடித்துள்ளார். இதனால் மாணவ மாணவியருக்கு இரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாலையில் வீடு திரும்பிய மாணவ மாணவியர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதில் புத்தாநத்தம் கிழக்குத் தெருவை சேர்ந்த மாணவர்கள் பைசூல் ரஹ்மான், முகமது தாரிக் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சில மாணவியர்களுக்கு அந்தரங்க இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதை பெற்றோர்களிடம் கூட காட்ட தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. இதையடுத்து இரத்தகாயம் ஏற்படும் அளவிற்கு மாணவ மாணவியரை அடித்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.