கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரத்தை குறித்து எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்!
கொரோனா பாதிப்பை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்போர் பட்டினி சாவால் இறந்து விட கூடாது எனவும், இதையும் முக்கிய பிரச்சனையாக கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் தேடலைக் கைவிட்டு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். இது இன்றைய நெருக்கடியான காலத்தின் இன்றியமையாத்தேவை என்பதை அனைவருமே உணர்ந்து நடந்து வருகிறார்கள். நோய்த்தொற்றிலிருந்து காத்துக் கொள்வதுபோலவே, உணவுத் தட்டுப்பாடின்றி காக்கவேண்டியதும் அவசியம்.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழக்கமாகக் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ள அல்லது இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது; அச்சுறுத்திக் கொண்டே வருகிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களில் துவரம் பருப்பு போன்றவற்றின் விலை 30% உயர்ந்துள்ளது. பூண்டு, மிளகாய் போன்றவற்றின் விலை 100%க்கு மேல் அதிகரித்துள்ளது. புளி, மிளகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
காய்கறிகளின் விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதாலும், இறைச்சி விலையும் அதிகரிப்பதாலும் மக்களின் அன்றாட உணவுத் தேவைக்குரிய அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் இடைத்தரகர்களுக்கும் பதுக்கல்காரர்களுக்கும் கொள்ளை லாபம் அடிக்கவே வழிவகுக்கும். காரணம், நெல் உள்ளிட்ட தானியங்களையும் காய்கறிகளையும் விளைவிக்கும் விவசாயிகளிடம் பழைய விலையிலேயே கொள்முதல் செய்வதால் அவர்களும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலைமை தொடருகிறது.
சிறு வணிகர்கள் – காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வோர் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த விலையேற்றத்தால் போதுமான அளவில் கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி இலாப நோக்கத்துடன் செயல்படக்கூடியவர்களைத் தடுத்து நிறுத்தி, அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய – மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
அத்துடன், 15 நாட்களாக எவ்வித வருமானமும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் அன்றாட உடலுழைப்புத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழை – நடுத்தர வர்க்கத்தினர், ஆகியோரின் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, வறுமை மெல்லப் புகுந்து வாட்டி வருவதையும் அரசாங்கம் உற்றுக் கவனித்து, அந்தப் பிரிவினரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திட வேண்டும்.
ஏப்ரல் 1 வரையிலான 144 தடையுத்தரவைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவித்த, குடும்ப அட்டைகளுக்கான நிவாரணம் ரூ.1000 என்பது, 21 நாட்கள் ஊரடங்கு காலத்திற்குப் போதுமானதாக இல்லை. தி.மு.க உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், தன்னார்வலர்களும் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குத் தொடர்ந்து உதவி வருகிறபோதும், அதுவே முழுமையானதாக அமைந்து விடாது.
கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகளைப் பெருவாரியான மக்களுக்கு விரைவாக நடத்தி, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதவற்கான நிவாரணத் தொகை – உணவுப் பொருட்களை நியாயமான அளவுக்கு வழங்குவதே மத்திய – மாநில அரசுகளின் உடனடி செயல்பாடாக அமைந்திட வேண்டும்.
டெல்லியில் தனியார் ஆய்வகம் ஒன்று, நான்கு சக்கர வாகனத்திற்குள்ளேயே சம்பந்தப்பட்டோரை உட்கார வைத்து, 15 நிமிட நேரத்தில் பரிசோதனைகளை முடித்து முடிவுகளை அறிவிக்கும் வகையிலான விரைவு சோதனையை மேற்கொண்டு வருவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. விரைவுச் சோதனைகளை அதிகப்படுத்தும் வகையில் இத்தகைய நடைமுறைகள் பற்றி, அரசுகள் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நோய்த்தொற்று அபாயத்திலிருந்து மக்களைக் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரம்தான், பட்டினிச் சாவு!
கொரோனாவைத் தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். பட்டினிச் சாவைத் தடுப்பதில் அரசுகளின் பணி அதிமுக்கியம். கொரோனாவின் இறுதி விளைவாக, பட்டினிச் சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அலட்சியம் செய்துவிடாமல், சரியாகத் திட்டமிட்டு இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.