அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இனிமேல் இதற்கு அனுமதி!! சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு!!
அமைச்சர் செந்தில் பாலாஜி இனிமேல் மனு தாக்கல் செய்யலாம் என சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் சட்ட விரோதமாக பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையால் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அவர் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
செந்தில் பாலாஜியின் மீதான வழக்கின் விசாரணை முடிந்து சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அவருக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகைகள் மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி அமலாக்க துறையால் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பின்னால் இந்த வழக்கானது சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சிறப்பு கோர்ட் விசாரிப்பதா? அல்லது மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட் விசாரிப்பதா? என்ற சட்ட சிக்கல் ஏற்பட்டதால் இந்த மனுவை பரிசீலனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டில் விளக்கம் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் முன்பு விசாரணை செய்யப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர்கள் ஜாமீன் மனு மட்டுமல்ல, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கையும் மத்திய அரசு அறிக்கை அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டு தான் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்வதற்கு இன்று காலையில் சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கினார்.