பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! வேகமாக பரவிவரும் டெங்குவால் உயிரிழந்த மாணவி !!
தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக உலகையே கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.அதற்கு முன்னால் கொசுக்களால் பரவி வந்த டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமான மக்கள் பலியாகினர். அதில் குழந்தைகளும் அடக்கம்.
இந்த சூழ்நிலைகளில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்து வந்த டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களுக்கு முன்னால் மேற்கு வங்காளத்தில் இந்த காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாக நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் இந்த காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது.
தற்போதைய தகவலின்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் குருமாம்ப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் காயத்ரி. தனியார் கல்லூரி மாணவியான இவர் திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் உடல்நல குறைவு காரணமாக மூலக்குளம் என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவே, அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த போதும் இன்று காலை கல்லூரி மாணவி சிகிச்சை பலன் இன்றி டெங்குவால் உயிரிழந்தார்.
இதை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவி டெங்குவால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பாக இருக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.