பொன்னி அரிசி மூட்டையில் ரேசன் அரிசியை போட்டு கொடுத்த உடன்பிறப்புகள்! திமுகவின் உள்ளே வெளியே நாடகம் அம்பலம்!
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட்டித்துள்ளன. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியதோடு அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஏப்ரல் மாத தேவைக்கான அரிசி, எண்ணெய், பருப்புகள் மற்றும் ரூ.1,000 உட்பட கொரோனா நிவாரண பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. மேலும் 19 வகையான அத்தியாவசிய பொருட்களும் விரைவில் தர இருக்கின்றனர்.
இந்நிலையில் மக்களின் அடிப்படை வாழ்வாதார பாதிப்பை கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த உதவிகளின் மூலம் தினக்கூலி மற்றும ஏழைமக்கள் ஓரளவு உணவு தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். கொரோனா தொற்று இருந்த ஒரு நபர் பொருட்களை வழங்கி வந்த நிலையில் தமிழக அரசு இதற்கான கட்டுப்பாட்டை விதித்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரம் பகுதியில் ஊரடங்கு பாதிப்பால் உணவு தேவைக்காக தவித்து வந்தனர். அங்கு திமுக சார்பில் நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு பிராண்ட் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன. இதனை வீட்டிற்கு வாங்கிச் சென்ற பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திமுகவினர் வழங்கிய கோபுரம் பிராண்ட் அரிசி மூட்டையில் பிராண்ட் அரிசிக்கு பதிலாக ரேசன் அரிசியே இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்மணி ஒருவர் இப்படி எங்களை ஏமாற்றலாமா என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அப்பெண் வீடியோவில் கூறியதாவது; எங்கள் பகுதியில் திமுகவினர் 5 கிலோ அரிசியை பைகளில் போட்டு கொடுத்தனர். ஆனால் அதில் பிராண்ட் அரிசிக்கு பதிலாக ரேசன் அரிசியே இருந்தது. இதை எப்படி சமைத்து சாப்பிட முடியும்? எங்களை ஏன் இப்படி ஏமாற்ற வேண்டும் என்று வேதனையுடன் கூறினார்.
இதில் மற்றொரு அதிர்ச்சியான செய்தியும் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி திமுக பெண் நிர்வாகி மேலிடத்தின் மூலம் தரமான அரசியை தயார் செய்து அனுப்பியதாகவும், தரமான அரிசியை திமுக நிர்வாகிகள் தங்கள் சுயதேவைக்கு பிரித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தரமான அரிசிக்கு பதிலாக ரேசன் அரிசியை நிரப்பி வழங்கிய உள்ளே வெளியே நாடகம் அம்பலமாகியதும் தெரியவந்துள்ளது.