பங்காரு அடிகளாருக்கும் எனக்கும் உள்ள உறவு தந்தை மகன் உறவு போன்றது!!! நாம் தமிழர் சீமான் பேட்டி!!!
மறைந்த ஓம்சக்தி தர்மபீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்களுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு தந்தை மகன் உறவு போன்றது என்று நாம் தமிழர். கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனராக இருந்த ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அவர்கள் கடந்த அக்டோபர் 19ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பங்காரு அடிகளார் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று(அக்டோபர்20) அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தர்மபுரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேசிய போது மறைந்த பங்காரு அடிகளார் அவர்களுக்கும் தனக்குமான உறவு தந்தை மகன் உறவு போன்றது என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் சீமான் அவர்கள் “தற்பொழுது மகளிருக்கு தமிழக அரசு மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதை எத்தனை மாதம் நீங்கள் கொடுக்கப் போகிறீர்கள். எங்கள் தாய்மார்கள் விவசாயம் செய்து தினமும் 500 ரூபாய் கூலி பெறுகிறார்கள். நீங்கள் தரும் 1000 ரூபாயை தினத்திற்கு கணக்கு போட்டால் அது வெறும் 30 ரூபாய் தான். நீங்கள் இலவசமாக கொடுக்கும் எதுவும் வேண்டாம். எங்களுக்கு சிறந்த தரமான கல்வியை இலவசமாக கொடுங்கள்” என்று பேசினார்.
தொடர்ந்து கள்ளச்சாராயம், காவிரி விவகாரம் தொடர்பாக பேசிய சீமான் அவர்கள் பங்காரு அடிகளார் அவர்கள் பற்றி “ஓம் சக்தி தர்ம பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பங்காரு அடிகளாரின் இறப்பு பேரிழப்பு தான். பங்காரு அடிகளாருக்கும் எனக்கும் உள்ள உறவு தந்தை மகன்-உறவு போன்றது. மறைந்த பங்காரு அடிகளார் அவர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்தேன். எல்லாரும் கருவறைக்குள் வந்து பூஜை செய்யலாம் என்று புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். நானே கருவறைக்குள் சென்று பூஜை செய்து உள்ளேன். மறைந்த பங்காரு அடிகளாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் பங்காரு அடிகளார் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து கொள்கின்றேன்” என்று அவர் கூறினார்.