கேரளாவின் பாரம்பரிய உணவு.. வாயில் வைத்ததும் கரையும் “அடை பிரதமன்” – செய்வது எப்படி?
நம்மில் பலருக்கு இனிப்பு என்றால் அலாதி பிரியம். அந்த வகையில் கேரளாவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான அடை பிரதமன் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இவை பச்சரிசி, தேங்காய்ப் பால், வெல்லம் உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*பச்சரிசி – ஒரு கப்
*வெல்லம் – 100 கிராம்
*தேங்காய்ப் பால் – 1 கப்
*முந்திரி பருப்பு – 8 முதல் 10
*உலர் திராட்சை – 8 முதல் 10
*ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை அளவு
*நெய் – தேவையான அளவு
*எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
அடை பிரதமன் செய்ய முதலில் 1 தேங்காய் எடுத்து உடைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் உள்ள பருப்புகளை சிறு சிறு துன்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பவுலுக்கு வடிகட்டி தேங்காய் பாலாக எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் பால் அதிகம் தேவைப்பட்டால் அரைத்த தேங்காய் கலவையை மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் சிறிது நேரம் அரைத்து பின்னர் வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து பவுலில் ஒரு கப் பச்சரிசி போட்டு அதில் தண்ணீர் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை கழுவிக் கொள்ளவும். பின்னர் பச்சரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற விடவும்.
அரசி நன்கு ஊறி வந்ததும் அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி அரிசியை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விடவும். பின்னர் அரிசி ஊற வைத்த தண்ணீரில் இருந்து சிறிதளவு ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் ஒரு தட்டில் அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை ஊற்றி தண்ணீர் கொதிக்கும் பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் வேகவிடவும். பின்னர் அடுப்பை அணைத்து இவற்றை நன்கு ஆற விடவும். பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் எடுத்து வைத்துள்ள 100 கிராம் வெல்லத்தை அதில் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் வெல்லத்தில் இருந்த தூசு மற்றும் மண் போன்றவை நீங்கிவிடும்.
அடுத்து அடுப்பில் அடிகனமான பாத்திரம் ஒன்றை வைத்து அதில் வேக வைத்து வெட்டி வைத்துள்ள அடை துண்டுகளை சேர்த்து கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அடுத்து கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து 1 சிட்டிகை அல்லது 2 சிட்டிகை அளவு ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி விடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் 10 முந்திரி பருப்பு, 10 உலர் திராட்சை சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்கவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள கலவையில் சேர்த்து களறி விட்டால் சூடான சுவையான கேரளா ஸ்டைல் அடை பிரதமன் தயார். இது கேரளா மக்களின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று.