நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! அதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!!
பிரபல நடிகர் ஜூனியர் பாலையா அவர்கள் உடல்நல குறைவு காரணமாக இன்று(நவம்பர்2) காலை காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பழம்பெரும் நடிகரான ஜூனியர் பாலையா அவர்கள் மறைந்த மற்றொரு பழம்பெரும் நடிகரான டி.எஸ் பாலையா அவர்களின் மகன் ஆவார். நடிகர் ஜூனியர் பாலையா தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.
நடிகர் ஜூனியர் பாலையா 1975ம் ஆண்டு வெளியான மேல்நாட்டு மருமகள் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு பிரபல நடிகராக ஜூனியர் பாலையா உயர்ந்தார்.
கும்கி, புலி, நேர்கொண்ட பார்வை, தனி ஒருவன், சங்கத்தலைவன், மாறா போன்ற படங்களிலும் நடிகர் ஜூனியர் பாலையா நடித்துள்ளார். நடிகர் ஜூனியர் பாலையா கடைசியாக 2021ம் ஆண்டு வெளியான என்னங்க சார் உங்கள் சட்டம் திரைப்படத்தில் நடித்திருப்பார்.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் 2000 முதல் 2001ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த வாழ்க்கை என்ற தொலைக்காட்சி தொடரிலும் 2014ம் ஆண்டு ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரியபாப்பா என்ற தொலைகாட்சி தொடரிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை ராதிகா சரத்குமார் நடித்து வந்த சித்தி என்ற தொலைகாட்சி தொடரிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் 70 வயதாகும் நடிகர் ஜூனியர் பாலையா அவர்களுக்கு ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று(நவம்பர்2) காலை திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் உயிரிழந்தார்.
இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினரும் பொதுமாக்களும் அவருடைய வீட்டில் குவிந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் ஜூனியர் பாலையா அவர்களின் உடலுக்கு நாளை(நவம்பர்3) இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.