சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு?
மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார் பிரதமர் மோடி.
தற்போது 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த திங்கட்கிழமை நேற்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் அரசு கோரியிருந்த 2000 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும் மே 31ம் தேதி வரை தமிழகத்தில் ரயில், விமானங்களை இயக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைப் பற்றி பிரதமர், முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் அந்த கூட்டத்தில் பேசியது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில் “கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், தங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளனர். இதை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது நிலவும் பிரச்சினையின் உண்மை தன்மையை உணர்ந்து, அதற்கேற்ப, நாம் தயாராக வேண்டும். கொரோனா பிரச்சினையால், தனிப்பட்ட மனிதரிலிருந்து, ஒட்டு மொத்த மனித சமுதாயமுமே ஒரு புதிய வாழ்க்கைக்குத் தயாராகி வருகிறது. முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவற்றில் சில கட்டுப்பாடுகள், இரண்டாவது ஊரடங்கிற்குத் தேவைப்படவில்லை. அதேபோல், மூன்றாவது ஊரடங்கு காலத்திலிருந்த சில நடவடிக்கைகள், அதற்கு பிந்தைய காலத்துக்கு தேவைப்படாது.
பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவே, சில வழித் தடங்களில் பயணியர் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அனைத்து வழித் தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படாது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விஷயத்தில், இனி அதிக கவனம் செலுத்தப்படும். அத்துடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான நடவடிக்கைகளும் படிப்படியாக அதிகரிக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.
இதனை வைத்துப் பார்க்கும் போது கொரோனா தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. எனவே சென்னை, மும்பை உட்பட சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றிருக்கும் நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. இதர மண்டலங்களில் சில தளர்வுகளை அரசு மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.