தனி மனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – ஆந்திராவின் அசத்தல் முயற்சி

0
95

தனி மனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – ஆந்திராவின் அசத்தல் முயற்சி

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-தேதியிலிருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு வேலை புரிபவர்களுக்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாநிலங்களின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பேருந்து சேவையை துவக்க அனைத்து மாநிலகங்களும் தயாராகி வருகின்றன. நாள் தோறும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டே பேருந்து சேவையைத் துவக்க வேண்டிய நிலையில் மாநில அரசுகள் உள்ளன.

வரும் 17ம் தேதி தமிழகத்தில் பேருந்து சேவையைத் துவக்கும் வகையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு விதிமுறைகளை அறிக்கையாக அனுப்பியுள்ளது.

அதில் கீழ்க்கண்ட விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது:

  • கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒட்டுநர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும்.
  • பேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுநர், நடத்துநர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • பயணிகள் இருக்கையில் அமர “மார்க்” செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
  • அதிக கூட்டம் கூடாதவாறு பயணிகள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அதேபோல் கூகுல்பே, இ-பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்.

இதெல்லாம் பின்பற்றப்பட்டாலும் தற்போதைக்கு உள்ளூர் பேருந்து சேவை மட்டுமே துவங்கவுள்ளது. அதே நேரம் 50% வரை மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்படும்.

இதனையெல்லாம் கருத்தில் கொண்டு ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம், தங்கள் பேருந்தில் இருக்கைகளை தனி மனித இடைவெளியுடன் மாற்றியமைத்துள்ளது. இதை அஅரசு அங்கீகரிக்கும் பட்சத்தில் மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்றி தனிமனித இடைவெளியுடன் அதிக அளவிலான பயணிகளை பேருந்தில் பயணம் மேற்கொள்ள வைக்க முடியும்.