என்ன தவறு நடந்தது என கேட்டால் இதைத்தான் சொல்வேன்!! ஒரு மாதம் ஆனபின்னாலும் என்னால் மீண்டு வர இயலவில்லை!!
உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஒரு மாதம் முடிவுற்ற நிலையிலும் தோல்வியிலிருந்து தன்னால் வெளிவர முடியவில்லை என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை வென்று 10 வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு வெற்றிகரமாக முன்னேறியது.
இருப்பினும் இறுதிப் போட்டியில் அதிர்ச்சி தரும் விதமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து கோப்பையை நழுவ விட்டது. உலகக் கோப்பை தொடர் முழுவதும் மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய அணியினர் இறுதியில் கோப்பையை வெல்ல முடியாததால் விரக்தி அடைந்தனர். அதிலும் குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்த தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆகிய இருவரும் மைதானத்திலேயே கண்கலங்கினர்.
உலக கோப்பை தொடர் முடிவடைந்து ஒரு மாதம் ஆனபோதிலும் தோல்வியில் இருந்து இன்னும் என்னால் வெளிவர முடியவில்லை என கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில், உலக கோப்பை தோல்வியிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. தோல்வியிலிருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுப்பது பற்றிய சிந்தனை இதுவரை என்னிடம் இல்லை. கோப்பையை நழுவ விட்டதில் இருந்து சில நாட்களாக என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. அந்த நேரங்களில் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்னைச் சுற்றி இருந்து ஆறுதல் அளித்தது எனக்கு உதவிகரமாக இருந்தது. இந்த தோல்வியை ஜீரணிப்பது என்பது எனக்கு எளிதல்ல. ஆனாலும் வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் நகர்ந்து தான் செல்ல வேண்டும்.
வாழ்க்கை பாதையில் நகர்வது அவசியம் என்றாலும் அது மிகவும் எனக்கு கடினமாகவே உள்ளது. நான் சிறுவயதிலிருந்தே 50 ஓவர் உலகக் கோப்பையை பார்த்து பார்த்து அதை வெல்ல வேண்டும் என நினைத்து வளர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் நான் வெல்ல வேண்டும் என நினைத்த மகத்தான பரிசு ஒன்று உண்டு என்றால் அது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தான்.
இதற்காக பல வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்தும் இறுதியில் அதை நழுவ விட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அதை நினைத்தாலே எரிச்சல் ஏற்படுகிறது. இந்த ஏமாற்றமும் எரிச்சலும் எதனால் என்றால் இந்த போட்டிக்காக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் வெற்றி பெறுவதற்காக முழு அர்ப்பணிப்புடன் செய்தோம். ஆனாலும் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. இதில் என்ன தவறு என்று யாரேனும் கேட்டால் தொடர்ச்சியாக பத்து வெற்றிகளை பெற்றது தான் முழுமையான தவறு என்று நான் கூறுவேன் எனத் தெரிவித்தார்.