நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. எனவே அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை பெருநகர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (17.02.2024) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது.
இதனிடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் நேரில் ஆஜராக இயலவில்லை என கெஜ்ரிவால் விளக்கம் அளித்ததை அடுத்து, மார்ச் 16-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று காணொளி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் சம்மனை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி வாயிலாக ஆஜர் ஆனார். அப்போது பேசிய அவர், ”நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகவே திட்டமிட்டு இருந்தேன். நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக தன்னால் நேரடியாக ஆஜராக முடியவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரும் நடைபெற்று வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளது. அதன்பிறகு எந்த ஒரு தேதி என்றாலும் கொடுங்கள்” என்றார்.
அதன்படி இன்று டெல்லி சட்டசபையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதுகுறித்து பேசிய அவர், “ஆம் ஆத்மியின் ஒரு எம்.எல்.ஏ. கூட பிரிந்து செல்லவில்லை.” என தெரிவித்துள்ளார்.