சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்து ‘முடி’மகன்களின் பிரச்சினையை தீர்த்த முதல்வர்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பின் முதல் நடவடிக்கையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது இரு  தரப்பினர்தான். ஒன்று குடிமகன்கள். இரண்டாவது முடி மகன்கள். சலூன் கடைகள் மூடப்பட்டதால் தலை நிறைய காடு போல் முடி வளர்த்து மிகவும் அவதிக்குள்ளாகியிருந்தனர். ஆனால் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில் மட்டும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கலாம் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தது.

ஆனால் இந்நிலையில் சென்னையை தவிர மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் இயங்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே ஊரக பகுதியில் முடி திருத்தும் நிலையங்கள் மே 19 முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது முடி திருத்தம் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து, சென்னை தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையங்களை நாளை (மே 24) முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்குவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்க அனுமதி கிடையாது. அந்த பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.

முடிதிருத்தம் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை நிலையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்குவதையும், முக கவசங்கள் அணிவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்நிலையத்தை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். ஏ.சி., வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment