தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்கவனம்.. பெறும் தமிழக தேர்தல் களம்..!!
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தமிழகம் மீது தேசிய கட்சிகள் தலைவர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் அனைத்து தேசிய கட்சி தலைவர்களும் அடுத்தடுத்து தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் பாஜகவினர் தலைதூக்கவில்லை. அவரின் மறைவிற்கு பின்னர் தான் பாஜக வெளியே வரவே தொடங்கியுள்ளது. அவ்வளவு ஏன் பிரதமர் மோடி கூட சமீபகாலமாக தான் அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார். அந்த வகையில் சமீபத்தில் மட்டும் 7 முறை தமிழகத்திற்கு வந்து விட்டார்.
அதன்படி கடந்த் சில தினங்களுக்கு பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சென்னையில் ரோடு ஷோ மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரை தொடர்ந்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். மதுரையில் இவரின் ரோடு ஷோ நடைபெற உள்ளது.
அமித் ஷாவை தொடர்ந்து நிர்மலா சீதாராமனும் தமிழகம் வருகிறார். அவர் கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட உள்ளார். இப்படி பாஜக தேசிய தலைவர்கள் போட்டி போட்டு ஒருவர் மாற்றி ஒருவர் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். இவர் கோவையில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்கிறார். அதேபோல அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவும் தமிழகம் வர உள்ளார். இப்படி அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி தேசிய தலைவர்கள் படையெடுத்து வருவதால், தமிழக அரசியல் கவனம் பெற்று வருகிறது.