தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!!
கொளுத்தும் கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்து விட்டாலே தாகத்தில் தொண்டை வறண்டு ஒரு சொட்டு நீர் கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள். அவர்களின் தாகம் போக்க சாலையோரங்களில், பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படுவது தான் இலவச தண்ணீர் பந்தல்.
கோடைகாலங்களில் இதுபோன்ற தண்ணீர் பந்தல்களை பெரும்பாலான இடங்களில் நாம் பார்க்கலாம். தாகத்தோடு இங்கு வரும் மக்களுக்கு தண்ணீர் மட்டுமின்றி மோர், பானகம் போன்றவையும் வழங்கப்படும். அதை அவர்கள் தாகம் தீர பருகி செல்லலாம். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், தஞ்சையை சேர்ந்த ஒப்பந்தகாரர் பாரதி மோகன் கடந்த 30 ஆண்டுகளாக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனது சொந்த செலவில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்த்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் நெருங்கும்போதே பாரதி மோகன் இந்த பணியை தொடங்கி விடுவாராம்.
இவரின் இந்த இலவச தண்ணீர் பந்தலில் நீர்மோர், பானகம் மற்றும் தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது எவ்வளவு பெரிய புண்ணியம் என பாரதி மோகனை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் அவரோ ஆரம்ப காலத்தில் கோவில் திருவிழாக்களில் மோர் பந்தல் அமைத்திருந்தாராம் அதை அப்படியே இப்போதும் தொடர்ந்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே நிறைய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளதாம் எனவே நாள்தோறும் இங்கு வரும் ஏராளமான மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருவதால், அவர்களின் தாகம் தீர்க்க இந்த பந்தலை அமைத்திருப்பதாக கூறியுள்ளார். இவரின் இந்த சேவைக்கு அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பக்கபலமாக இருந்து உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.