ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா திருமாவளவன்.. சிதம்பரம் தொகுதி நிலவரம் என்ன தெரியுமா..??
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேட்பாளராக களம் காண்கிறார். இவர் ஆறாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு முன்பு இரண்டு முறை வெற்றி பெற்ற திருமாவளவன் தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெற போராடி வருகிறார்.
மேலும், இந்த தொகுதியில் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, திமுக 4 முறை, பாமக 3 முறை, விசிக 2 முறை, அதிமுக 2 முறை என வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த தேர்தலில் விசிக சார்பாக திருமாவளவன், அதிமுக சார்பாக சந்திரகாசன், பாஜக சார்பாக கார்த்தியாயினி, மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஜான்சி ராணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
சிதம்பரம் தொகுதியில் மட்டும் 15,10,915 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,49,623 ஆண் வாக்காளர்களும், 7,61,206 பெண் வாக்காளர்களும், 86 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இதில் வன்னியர்கள் 35%, தலித்துகள் 31%, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் 6% உள்ளனர். இதுதவிர பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் 6வது முறையாக களம் காணும் திருமாவளவன் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக இதே தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற திமுகவின் வாக்கு வங்கியை திருமாவளவன் அதிகமாக நம்புகிறார். இருப்பினும் அவரின் நம்பிக்கை எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. இந்த முறை வெற்றி பெற்ற்ய் 3வது வெற்றியை பதிவு செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.