மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா..??வாட்ஸ் அப் வதந்தியால் பதறும் வாக்காளர்கள்..!!
ஒருவழியாக தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டது. 7 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில் முதல் கட்டமாக நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் இன்று முதல் வாக்குச்சாவடிகளை தயார்ப்படுத்தும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சோசியல் மீடியாவில் பரவி வரும் வதந்தியால் வாக்காளர்கள் பீதியில் உள்ளனர்.
அதன்படி வாட்ஸ் அப் போன்ற சோசியல் மீடியாக்களில் கைகளில் மருதாணி மற்றும் மெஹந்தி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாது என்ற தகவல் ஒன்று பரவி வருகிறது. குறிப்பாக இந்த தகவல் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பரவி இருப்பதால், அங்குள்ள மக்கள் பதறிப்போய் கெமிக்கல்களை கொண்டு மருதாணியை அழித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேர்தல் ஆணையம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி, நமது நாட்டில் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின்போது பெண்கள் மருதாணி அல்லது மெஹந்தி வைப்பது வழக்கமான ஒன்று. வடமாநிலங்களில் மெஹந்தி வைப்பதையே தனிச்சடங்குகள் செய்து வருகிறார்கள்
அப்படி உள்ள நிலையில், மெஹந்தி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாது என்று சோசியல் மீடியாவில் பரவி வரும் தகவல் அடிப்படை ஆதாரமற்றது. வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று கூறி சென்னை தேர்தல் அலுவலர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதன் பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.